காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்


காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 Dec 2020 10:31 AM IST (Updated: 11 Dec 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி -அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பொழிந்ததால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அனைத்து பாசனங்களுக்கும் முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் காலிங்கராயன் பாசன பகுதியில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், 9 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

அறுவடை பணி தீவிரம்

தற்போது, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிக்கு உட்பட்ட காலிங்கராயன் பாளையம், பி.பி.அக்ரஹாரம், வைராபாளையம் போன்ற பகுதிகளில் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மழையும், பாசன தண்ணீரும் இந்த ஆண்டு சீராக இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு நெல் அறுவடை விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Next Story