நாமக்கல்லில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் நேற்று ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார்.
கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சேலம் சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜவ்வரிசி ஆலைகள் தொடர்ச்சியாக இயங்கவும், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், கலப்படம் உள்ளிட்ட தவறுகள் நடைபெறாமல் தடுக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி கனமழை பெய்து வருவதால், மின்சாரத்தை கொண்டு செல்ல புதைவிட மின்பாதை அமைக்கும் பணி ரூ.340 கோடியில் நடைபெற்று வருகிறது. இப்பணி தற்போது 90 சதவீதம் முடிந்து விட்டது. முதற்கட்டமாக 11 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க உள்ளோம். இன்னும் 2 மாதங்களில் இப்பணி முடிவடையும். நாகை மாவட்டத்தை பொறுத்த வரையில் வேளாங்கண்ணியில் ரூ.120 கோடியில் புதைவிட மின்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தற்போது 50 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன. திருவாரூர் மாவட்டத்திலும் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று இப்பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த வாரம் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். அவர்களிடம் சேகோசர்வ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். தற்போது அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை அரசு செய்து தரும் என தெரிவித்து உள்ளோம். அவர்களும் தொடர்ந்து ஆலைகளை நடத்துவதாக தெரிவித்து உள்ளனர். இதேபோல் மரவள்ளி கிழங்கிற்கு கூடுதல் விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். அதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வரிசியில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story