வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; இன்றும், நாளையும் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.
வாக்காளர் பட்டியல்
இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி, குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் நடந்து வருகிறது. 1-1-2021-ஐ தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இறந்த, புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ளவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும் சிறப்பு முகாம்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்ப படிவங்கள்
குமரி மாவட்டத்திலுள்ள 1,694 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங் களில் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் தனிநபர்களுக்கு பூர்த்தி செய்யப்படாத படிவங்கள் மொத்தமாக வழங்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நேரடியாக வாக்குச்சாவடி மையங்களில் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மொத்தமாக பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த வாய்ப்பினை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story