குடியாத்தத்தில் கால்வாய் கட்டும் பணியால் பொதுமக்கள் அவதி; விரைந்து முடிக்க கோரிக்கை


நான்கு முனை சந்திப்பு பகுதியில் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
x
நான்கு முனை சந்திப்பு பகுதியில் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 12 Dec 2020 1:15 AM IST (Updated: 12 Dec 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் கால்வாய் கட்டும் பணிகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கால்வாய் கட்டும் பணி
குடியாத்தம் நகரில் இருந்து வேலூர் செல்ல குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அம்பேத்கர் சிலை வழியாக பள்ளிகொண்டா சென்று வேலூர் செல்கின்றனர். மற்றொரு பக்கம் காட்பாடி, சித்தூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல புதிய பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு வழியாக வாகனங்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

தற்போது இரண்டு மாதத்திற்கும் மேலாக குடியாத்தம்- காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் நடுவே கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் குடியாத்தம் -காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்ல வழியில்லாமல், மாற்றுப்பாதையாக புதிய பஸ் நிலையம், அம்பேத்கர் சிலை வழியாக பலமநேர் சாலை வழியாக செல்கின்றன.

விரைந்து முடிக்க கோரிக்கை
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள், பணியை விரைந்து முடிக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் குடியாத்தம் நகரின் முக்கியமான பகுதி காட்பாடி ரோடு நான்குமுனை சந்திப்பு. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு 2 மாதத்திற்கு மேலாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கால்வாய் கட்டும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்றனர்.

காட்பாடி ரோட்டில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியில் இரு புறமும் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கால்வாய்கள் மீது நடைபாதை அமைத்தால் கடைக்கு வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூரிடம் நேற்று மனு அளித்தனர்.

Next Story