ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது; சொர்க்கவாசல் திறப்பில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா
x
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா
தினத்தந்தி 12 Dec 2020 2:23 AM IST (Updated: 12 Dec 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. சொர்க்கவாசல் திறப்பில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா
பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பானதாகும்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளைமறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

விழாக்கோலம் பூணும் ஸ்ரீரங்கம்
வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அன்று மட்டும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அதுவும் சொர்க்கவாசல் திறக்கப்படும் அதிகாலை நேரத்தில் நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து செல்வதற்காக முந்தைய நாள் இரவே பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் வந்து காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.

இதே போல் மோகினி அலங்காரம், நம்பெருமாள் வேடுபறி கண்டருளல் மற்றும் தினமும் நடைபெறும் புறப்பாடு நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். இதன் காரணமாக திருவிழா நடைபெறும் 21 நாட்களும் ஸ்ரீரங்கம் கோவில் வளாகம் மட்டும் இன்றி புண்ணிய பூமியான ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

கொரோனாவால் கட்டுப்பாடு
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் படி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கொரோனா நுண்கிருமி தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின்படி திருவிழா நாட்களில் டிசம்பர் 15-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் திறப்பு ஆகியவற்றிற்கு பக்தர்கள் www.sri-r-a-n-g-am.org என்ற கோவில் இணையதளத்தில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் (ரூ.250) ஆகியவற்றிற்கு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பக்தர்கள் தாங்கள் விரும்பிய நாட்களில் முன்பதிவு செய்த நேரத்தில் இருந்து 30 நிமிட நேரத்திற்கு முன்பாக கோவிலுக்குள் வரவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுஉள்ளது.

அனுமதி கிடையாது
பகல் பத்து திருவிழா தொடங்கும் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி முடிய நம்பெருமாள் புறப்பாடு காலமான காலை 6.30 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நம்பெருமாள் புறப்பாடாகி பகல் பத்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியவுடன் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணிக்கு மேல் மூலவர் மற்றும் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் தரிசிக்க அனுமதி கிடையாது.

பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் 25-ந்தேதி அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அப்போது நம்பெருமாளுடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வர பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.

ராப்பத்து 2 முதல் 6 வரை (26-12-20 முதல் 30-12-20) மற்றும் 9-ம் திருநாளான 2-1-2021 ஆகிய நாட்களில் மூலவர் முத்தங்கி சேவை காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரையும், நம்பெருமாள் புறப்பாடாகி பரமபதவாசல் கடந்தவுடன் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி முடிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நம்பெருமாள் புறப்பாடு நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 31-ந்தேதி திருக்கைத்தல சேவை தினத்தன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 1-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது. அன்றைய தினம் மூலவர் முத்தங்கி சேவை காலை 5.30 மணி முதல் காலை 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி முடிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ராப்பத்து 10-ம் நாள் (3-1-2021)நம்பெருமாள் புறப்பாடாகி பரமபதவாசல் கடந்தவுடன் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி முடிய மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தகவல்களை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.

Next Story