காஞ்சீபுரத்தில் விபரீத முடிவு: கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - பெற்றோரை இழந்த 2 பிஞ்சு குழந்தைகளும் அனாதையான சோகம்
காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்,
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை பூர்வீகமாக கொண்டவர் கதிர்வேல் (வயது 40). இவரது மனைவி மணிமேகலை (35). இவர்களுக்கு முத்து அட்சயா (7), நிவாசினி வயது (4) ஆகிய 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் காஞ்சீபுரம் விநாயகபுரம் பகுதியில் உள்ள குப்பம்மாள் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கதிர்வேல் காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் குடும்பத்துடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் இரவு தூங்க சென்றனர். இதற்கிடையே அனைவரும் தூங்கிய பின்னர், நள்ளிரவில் எழுந்த மணிமேகலை வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று மின் விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி அருகில் காணாததை தொடர்ந்து, அவரை தேடி கதிர்வேல் அறைக்கு வந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், மனைவியை இறக்கி விட்டு அதே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலை விடிந்ததும் 2 பிஞ்சு குழந்தைகளும் பெற்றோரை தேடி பார்த்த நிலையில், வீட்டில் இறந்து கிடந்த தாய், தந்தையின் உடலைப் பார்த்து, செய்வதறியாது கதறி அழுதுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டதும், பதறிய அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரத்தில் 2 பிஞ்சு குழந்தைகளையும் அனாதையாக தவிக்கவிட்டு கணவன், மனைவி தூக்குப்போட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story