ஆட்சியின் சாதனைகளை சொல்லி தி.மு.க. ஓட்டு கேட்க முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை கூறி தி.மு.க.வினர் ஓட்டு கேட்க முடியுமா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
ஆலோசனைக் கூட்டம்
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள திருமண மகாலில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கோ.பாரி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ஓ.எம்.கே.சந்திரன், கலை பிரிவு மோகன்தாஸ், விவசாய பிரிவு கருத்தகண்ணன், மாணவரணி உசிலை முத்துகிருஷ்ணன், இளைஞர் அணி புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எழுச்சி
கடந்த 1972-ல் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது எழுச்சி ஏற்பட்டது. அதேபோல 2021-ல் தமிழகம் முழுவதுமாக எழுச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் இயக்கமாக, உண்மையிலே ஜனநாயக இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது.
மு.க.ஸ்டாலின் தன்னால் கட்சியை நடத்த முடியாமல் பீகாரில் இருந்து ஒருவரை இறக்குமதிசெய்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறார். அவர் தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு செய்த சாதனைதான் என்ன?
தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பஞ்சாயத்து, நில மோசடிதான் சாதனையாக இருந்தது. அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளை பட்டியிலிட்டு மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம். தமிழகத்தில் ஜனநாயக இயக்கமாக இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். மற்ற கட்சிகளுக்கு அந்த தகுதி இல்லை.
நடிகர்கள்
எம்.ஜி.ஆர். ரத்தத்தை வியர்வையாக சிந்தி மக்களுக்காக வாழ்ந்தார். கொடுத்து, கொடுத்து வாழ்ந்த தலைவர் எம்.ஜி.ஆர். பொது வாழ்க்கையில் ஜெயலலிதா மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தார். சினிமாவில் எழுதி கொடுக்கும் கதை வசனத்தை பேசி நடிக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பாரபத்தி ஊராட்சி தலைவர் கசுவி முத்தையா, முன்னாள் ஊராட்சி தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், அண்ணாதொழிற்சங்க பகுதி செயலாளர் மணி, வட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் வட்ட செயலாளர் பொன்முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story