பூமிக்கடியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி: விவசாயிகளுக்கு 7 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்; வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
பூமிக்கு அடியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 7 மடங்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
எரிவாயு குழாய் அமைக்கும் பணி
சென்னை எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் பூமிக்கு அடியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 12-ந்தேதி கொட்டாம்பட்டி அருகே உள்ள அலங்கம்பட்டியில் விளைநிலங்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் அப்பணிகள் அனைத்தும் கிடப்பில் உள்ளன.
இது தொடர்பாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் அலங்கம்பட்டி கிராமத்திற்கு நேற்று நேரில் வந்து எரிவாயு கொண்டும் செல்லும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள விவசாயிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அவருடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:-
இது போன்ற எரியாவு குழாய்களை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தான் பதிக்க வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. விவசாயிகளுக்கான இழப்பீடானது நிலங்களுக்கான, பயிர்களுக்கான என 7 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட வேண்டும். அதில் எந்த சமரசமும் கிடையாது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். விபத்து சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்டவைகளை நிறுவனமே மேற்கொள்ள வேண்டும். இப்பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன். இந்திய வரலாற்றில் உழவர் சமூகம் இவ்வளவு எழுச்சி கொண்ட காலம் இல்லை. போராட்டத்தால் பல வட மாநிலங்கள் ஸ்தம்பித்துள்ளது.
பாரத் பந்த் தோல்வி என்பதெல்லாம் அவர்களின் கனவு. விவசாயிகள் கோரிக்கையானது வெற்றி பெறும். அடிப்படையில் இந்த 3 சட்டங்களும் முழுக்க, முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கான சட்டம். இது திரும்ப பெறப்படும் வரை விவசாயிகளும், தேச நலன் கருதிய மக்களும் எதிர்ப்பார்கள்.
சோழர் காலத்திலேயே நமது ஜனநாயகம் செழிப்போடு இருந்தது என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். அது உண்மை என்றால் சோழர் காலத்தில் ஓட்டெடுப்பின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதும் உண்மை. மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்தாமலே வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவ்வாறு வெங்கடேசன் எம்.பி. கூறினார்.
ஆர்ப்பாட்டம்
வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து மேலூரில் பள்ளிவாசல் ஜாமாத்தார்கள் ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர். பெரிய பள்ளிவாசல் தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார்.
மதுரை எம்.பி. வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வேளாண்மை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாரே பெரிய பள்ளிவாசலில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story