குமரியில் பாரம்பரிய திருவிழா: குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு காவடி எடுத்த போலீசார்


போலீஸ் நிலையத்தில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டதையும், பக்தர்களை வரவேற்கும் சாலையோரம் வாழைக்குலை தோரணம்
x
போலீஸ் நிலையத்தில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டதையும், பக்தர்களை வரவேற்கும் சாலையோரம் வாழைக்குலை தோரணம்
தினத்தந்தி 12 Dec 2020 6:34 AM IST (Updated: 12 Dec 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு போலீசார் காவடி எடுத்தனர். மேலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வேளிமலை குமாரசாமி கோவில்
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று தக்கலை குமாரகோவில் வேளிமலை குமாரசாமி கோவில். திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று வந்தனர்.

அதனை தொடர்ந்து பாரம்பரியமாக குமரி மாவட்டத்தில் மழை வளம் பெருகி விவசாயம் செழித்தோங்க பொதுப்பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைந்து பொதுமக்கள் அமைதியாக வாழ வேண்டி தக்கலை காவல்துறை சார்பிலும், பக்தர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறிடவும் யானை மீது பால்குடம், புஷ்ப காவடி, வேல் காவடி எடுத்து ஊர்வலமாக செல்லுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளை விதித்ததால் யானை ஊர்வலம், பறக்கும் காவடிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடிகளை மட்டும் எடுத்து சென்றனர்.

காவல்துறை- பொதுப்பணித்துறை
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காவடி ஊர்வலம் நடந்தது. தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய காவடிகட்டு பூஜையில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எழில்வேலன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி விஸ்வதா, பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, துணை சூப்பிரண்டு பீட்டர்பால், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த காவடிகட்டு பூஜையில் உதவி செயற்பொறியாளர் கதிரவன், முன்னாள் உதவி செயற்பொறியாளர் மோகனதாஸ், பொறியாளர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து 2 புஷ்ப காவடிகளும், பொதுப்பணித்துறை சார்பில் 2 புஷ்ப காவடிகளும் தக்கலை பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின்னர் புலியூர்குறிச்சி, பிரம்மபுரம் வழியாக குமாரகோவிலை சென்றடைந்தது.

100-க்கும் மேற்பட்ட காவடிகள்
இதுபோல், தக்கலை சுற்று வட்டார பகுதிகளான வலியகரை, ராமன்பரம்பு, தென்கரை, பத்மநாபபுரம், வெட்டிகோணம், வழுக்கலம்பாடு, இரணியல், கோணம், முட்டைக்காடு, முத்தலக்குறிச்சி, தக்கலை பாரதிநகர், குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புஷ்ப காவடி, வேல்காவடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காவடிகள் குமாரகோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

காவடிகள் மூலம் எடுத்து செல்லப்பட்ட பால், இளநீர், தேன், பன்னீர், களபம், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் மூலம் குமாரசாமிக்கு அபிஷேகம், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி கோவிலுக்கு திரளாக வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தகர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

வாழைத்தோரண வரவேற்பு
குமாரகோவிலுக்கு பாரம்பரிய முறைப்படி காவடி எடுத்துச் செல்லும் பொதுப்பணித்துறையினர், போலீசார் மற்றும் பக்தர்களை வரவேற்கும் வகையில் தக்கலை புலியூர்குறிச்சி தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோப்பு பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை குலைகள் தோரணம் அமைப்பது வழக்கம்.

அதேபோல் ஏத்தன், செந்துளுவன், மட்டி, ரசகதலி, பாளையங்கோட்டான், பேயன், சிங்கன், வெள்ளை துளுவன் உள்பட 9 வகையான சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைக்குலைகளை கட்டியிருந்தனர்.

Next Story