கூடலூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கூடலூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையையொட்டி தம்மணம்பட்டி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 36 குடும்பத்தினர் வீடு கட்டினர். இவர்கள் தங்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். இந்நிலையில் இந்த குடியிருப்புக்கு அருகே தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் மூலம் 301 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து வருவாய்துறையினர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கலந்து பேசி 36 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்றுவாரியம் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இவர்கள் மாற்று இடத்தில் தற்காலிக குடிசைகள் அமைக்க தலா ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் 22 குடும்பத்தினர் அதே பகுதியில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்து தகரசெட்டுகள் போட்டு குடியேறினர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்குவதாகவும், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து வெளியேறுமாறும் கூறினர். இதையடுத்து சிலர் தாங்களாக ஆக்கிரமிப்பை அகற்றிக்கொண்டனர். 16 குடும்பத்தினர் மட்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை. இதையடுத்து அவர்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று வருவாய்த்துறையினர், மின்வாரிய துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தம்மணம்பட்டிக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். மேலும் பாதுகாப்புக்காகவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் திரண்டு வந்து, மேலும் எங்களுக்கு 4 நாட்கள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீடுகளை அகற்ற விடாமல் தடுத்தனர்.
அப்போது கட்டிட தொழிலாளியான அய்யப்பன் மனைவி சந்திரா (வயது 23)விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை போலீசார் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் கீதா என்ற பெண் கத்தியை கையில் எடுத்துக்கொண்டு வீட்டை காலிசெய்ய சொன்னால் வயிற்றில் குத்தி தற்கொலை செய்துகொள்வேன் என போலீசாரை மிரட்டினார். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலைமறியல் செய்த 16 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.
இதுகுறித்து தாசில்தார் உதயராணி கூறும்போது, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன என்றார்.
Related Tags :
Next Story