ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை கோவை கோர்ட்டு தீர்ப்பு
ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொலிக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(45). இவர்கள் 2 பேரும் சேர்ந்து, பெருந்துறை பட்டகாரன்பாளையத்தில் ‘ஆர்.கே. ஈமு கோழி பார்ம்’ என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு ஈமு கோழிப்பண்ணை நடத்தினார்கள். அந்த பண்ணையில் முதலீட்டாளர்கள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள் தரப்படும். மேலும் பராமரிப்பு செலவு, தீவனம் ஆகியவை வழங்கப்படும். இது தவிர ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரமும், போனசாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும். பின்னர் 3 ஆண்டுகள் கழித்து அவர்கள் செலுத்திய ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் திருப்பி அளிக்கப்படும் என்று அதன் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த பண்ணையில் பணம் முதலீடு செய்தனர். சில மாதங்கள் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பணம் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பெருந்துறை பெருமாபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் 110 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.60 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 21 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராத தொகையில் ரூ.1 கோடியே 20 லட்சத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.எஸ்.ரவி தனது உத்தரவிட்டார்.
தீர்ப்பு கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈமு கோழி மற்றும் கோழி பண்ணை மோசடி வழக்குகளில் தீர்ப்புக்கூறும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பது அதிகரித்து வருகிறது. இந்த கோர்ட்டில் கடைசியாக தீர்ப்பு கூறப்பட்ட 2 வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story