தேனி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; கணக்கில் வராத பணம் சிக்கியது
தேனி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.5 ஆயிரத்து 500 சிக்கியது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அமைந்துள்ளது. கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு இங்கு அனுமதிச்சான்று வழங்கப்படுகிறது. இங்கு வாகன அனுமதிச்சான்று பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தேனி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் நேற்று காலை 7 மணியளவில் இந்த சோதனை சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
கணக்கில் வராத பணம்
சோதனையின் போது அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியே செல்வதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தடை விதித்தனர். காலை 9.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.5 ஆயிரத்து 500 சிக்கியது. அவற்றையும், முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவற்றை தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் எடுத்து சென்றனர். கணக்கில் வராத பணம் என்பதால் இதுகுறித்து துறைவாரியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story