நாகர்கோவிலில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த எல்.ஐ.சி. முகவர் சாவு; பழுதான ‘லிப்ட்’ உயிரை பறித்த சோகம்


கிருஷ்ணமூர்த்தி
x
கிருஷ்ணமூர்த்தி
தினத்தந்தி 13 Dec 2020 2:34 AM IST (Updated: 13 Dec 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த எல்.ஐ.சி. முகவர் பரிதாபமாக இறந்தார். பழுதான ‘லிப்ட்‘ அவருடைய உயிரை பறித்தது.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எல்.ஐ.சி. முகவர்
குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 66). இவர் பார்வதிபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று வழக்கம் போல தனது காரில் பணிக்கு சென்றார். ஆனால், இரவு வெகு நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து எல்.ஐ.சி. அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அலுவலக வளாகத்தில் அவரது கார் நின்றது. இதனால் கிருஷ்ணமூர்த்தி அலுவலகத்தில் தான் இருப்பாரோ என நினைத்து சென்றனர். அங்கு உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள லிப்ட்க்கு கீழ் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் திடுக்கிட்ட அவர்கள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

உயிரை பறித்தது
மேலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் ‘லிப்ட்‘ பழுதாகி இருந்ததாகவும், அதுவே கிருஷ்ணமூர்த்தியின் உயிரை பறித்தது என்றும் கூறப்படுகிறது. அதாவது, எல்.ஐ.சி. அலுவலகம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 3-வது மாடியில் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தில் லிப்ட் வசதி உள்ளது. ஆனாலும் அந்த லிப்ட் சரிவர இயங்காமல் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ‘லிப்ட்‘டில் செல்வதற்காக பட்டனை அழுத்தி கிருஷ்ணமூர்த்தி காத்து நின்றதாகவும், ஆனால் ‘லிப்ட்‘ 3-வது மாடியில் நிற்காமல் மேலே சென்றதாகவும் தெரிகிறது. ஆனால் ‘லிப்ட்‘ நிற்பதாக நினைத்துக்கொண்டு ஒருபுற கதவை கிருஷ்ணமூர்த்தி திறந்து சென்ற போது, அவர் கால் தவறி கீழே விழுந்து அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பழுதான ‘லிப்ட்‘ காரணமாக எல்.ஐ.சி. முகவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story