சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் போலீஸ் தேர்வு எழுதுகிறார்கள்; கட்டாயம் முககவசம் அணிந்து வர அறிவுரை


சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் போலீஸ் தேர்வு எழுதுகிறார்கள்; கட்டாயம் முககவசம் அணிந்து வர அறிவுரை
x
தினத்தந்தி 12 Dec 2020 10:23 PM GMT (Updated: 12 Dec 2020 10:23 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் இன்று போலீஸ் தேர்வு நடைபெறுகிறது. இதில் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். கட்டாயம் முககவசம் அணிந்து வந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

12 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
தமிழ்நாடு காவல்துறையில் 2-ம்நிலை காவலர் மற்றும் சிறைகாவலர், தீயணைப்பு வீரர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு எழுத்து தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 306 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு காரைக்குடியில் 16 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரா்கள் காலை 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். வரும் போது புகைப்படம் ஒட்டிய அழைப்பு கடிதத்துடன் கூடுதலாக ஏதாவது ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

முககவசம் அவசியம்
தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முககவசம் அணிந்துவர வேண்டும். தேர்வு எழுத தேவையான பால்பாயிண்ட் பேனா, பென்சில், மற்றும் எழுதும் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.சரியாக காலை 11 மணிக்கு தேர்வு தொடங்கிவிடும்.

தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துவரக்கூடாது. ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story