மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்


மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
x

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.

பெரம்பலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் கடந்த மாதம் 21, 22-ந் தேதிகளில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.

தற்போது 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.

இன்றும் நடக்கிறது

இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-ம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-ம் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.

முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

முன்னதாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரும், பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சஜ்ஜன் சிங் ரா.சவான், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணிகள் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னா் அவர் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் வாக்குச்சாவடி மையத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னம், மேலமாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் நடந்த சிறப்பு முகாம்களை ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சப்-கலெக்டர் பத்மஜா, தாசில்தார்கள் அருளானந்தம், பாலசுப்பிரமணியம், சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன் சிங் ரா.சவான் கலந்து கொண்டு கலெக்டர் ரத்னா முன்னிலையில் அலுவலர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் அரியலூரில் உள்ள பள்ளிகளில் நடந்த சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story