வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்தியஅரசு அலுவலகம் முற்றுகை-சாலை மறியல்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்தியஅரசு அலுவலகம் முற்றுகை-சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2020 7:51 AM IST (Updated: 13 Dec 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி மத்திய கலால் மற்றும் சுங்கவரி அலுவலகத்தை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான மின்சார கட்டண சலுகை அனைத்தையும் ரத்து செய்யும் புதிய மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சை மருத்துவக்கலலூரி சாலை பாலாஜிநகர் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கவரி அலுவலகத்தை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நேற்றுகாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை மறியல்

இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என அலுவலக நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு, அதற்கு முன்பு இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை அமைத்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரும்பு தடுப்புகளை தூக்கி வீச முயற்சி செய்தனர். ஆனால் எதிர்தரப்பில் போலீசார் இரும்பு தடுப்புகளை பிடித்து தடுத்து நிறுத்தினர். இரும்பு தடுப்புகளை இணைத்து கயிறு கட்டப்பட்டு இருந்ததால் அவைகளை தூக்கி வீச முடியவில்லை.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நிர்வாக பொறுப்பாளர்கள் முருகேசன், வாசுதேவன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, நிர்வாகிகள் ராமசாமி, ராசு.முனியாண்டி, சாமி கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டு 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

150 பேர் கைது

இந்த போராட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மின்பஸ்கள், வேன்களில் ஏற்றி சென்றனர். மொத்தம் 4 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story