மழைநீர் வடிந்துள்ள பகுதிகளில் ஒரு வாரத்துக்குள் தூய்மை பணியை முடிக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவு
மழைநீர் வடிந்துள்ள பகுதிகளில் ஒரு வாரத்துக்குள் தூய்மை பணியை முடிக்க வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மழை வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுசீரமைப்பு பணிக்கு தேவையான நிதியை பெற்றுத்தருவதில் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதுதான் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும். சேதமடைந்த அனைத்து வீடுகள், கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பை எந்தவித விடுதலுமின்றி மேற்கொள்ள வேண்டும்.
கணக்கெடுப்பு பணி
பயிர்சேத கணக்கெடுப்பு பணியை, கூடுமானவரை சாகுபடிதாரர்கள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிக்கு, கூடுதலாக தற்காலிக பணியாளர்களை நியமித்து அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்தப்பட்ட பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளித்து நோய் தொற்று பரவாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு கொசு பரவலை தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுமருந்துகளை தெளித்து, நல்ல தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிந்துள்ள பகுதிகளில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தூய்மை பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
பயனாளிகள் பட்டியல்
நிவாரணம் வழங்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யும்போது உண்மைத்தன்மை இருக்க வேண்டும். நிவாரணம் பெறுபவர்களின் ஆவணங்களை சரிபார்த்து, உரிய நபருக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் அனைத்து பணிகளையும் அந்தந்த துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் மேற்பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தவும், நோய் தொற்றில் இருந்து கட்டுப்படுத்தவும், நிவாரணங்கள் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், சப்- கலெக்டர்கள் சிதம்பரம் மதுபாலன், விருத்தாசலம் பிரவின்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story