விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள வட்டார போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள வட்டார போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை அடுத்த ஒழிந்தியாம்பட்டில் உள்ள தமிழக எல்லைப்பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற்றுச்செல்ல இந்த சோதனைச்சாவடியில் அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு கார், லாரி போன்ற வாகனங்களுக்கு ரூ.100-ம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.200-ம், சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.300-ம் என்று அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனைச்சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட வாகன அனுமதி கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் ஒழிந்தியாம்பட்டு சோதனைச்சாவடிக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கூடுதல் கட்டணம் வசூல்
அப்போது சோதனைச்சாவடி அலுவலக அறை, பதிவறை உள்ளிட்ட அனைத்து அறைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அதோடு வாகனங்களுக்கான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ரசீதுகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 3 மணி நேரத்திற்கு பிறகு காலை 8 மணிக்கு முடிவடைந்தது.
இந்த சோதனையின் முடிவில் சோதனைச்சாவடி அலுவலக அறையில் இருந்து ரூ.5,500-ம், பதிவறையில் இருந்து ரூ.7 ஆயிரமும், வாகன டிரைவர்கள் 2 பேரிடம் இருந்து ரூ.3,500-ம் ஆக மொத்தம் ரூ.16 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொகைக்கு சோதனைச்சாவடி அலுவலக அதிகாரிகளால் உரிய கணக்கு காட்ட முடியவில்லை. விசாரணையில், 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலித்ததன் மூலம் இந்த தொகை கிடைக்கப்பெற்றது தெரியவந்தது.
கணக்கில் வராத பணம் சிக்கியது
இதையடுத்து கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்தையும் மற்றும் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story