கூடலூர் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.34,700 பறிமுதல்


கூடலூர் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.34,700 பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2020 6:40 PM IST (Updated: 13 Dec 2020 6:40 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.34,700 பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூர்,

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா என 3 மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உள்ளது. இங்குள்ள தொரப்பள்ளி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் வழக்கம்போல் வெளிமாநில வாகனங்களை தணிக்கை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சோதனைச்சாவடி அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தனர்.

பின்னர் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் அறைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.34,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோதனைச்சாவடி அலுவலகத்தில் பணியில் இருந்த வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் ராஜசுலோசனா, அலுவலக உதவியாளர் சிபி ஜேக்கப் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அது கணக்கில் வராத பணம் என உறுதி செய்யப்பட்டது. காலை 11.30 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஊட்டி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:-

கூடலூர் அருகே தொரப்பள்ளி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் வாகன ஓட்டுனர்களிடம் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் வந்தது. அதனடிப்படையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத ரூ.34,700 பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story