தேனி மார்க்கெட்டில் பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி; வியாபாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
தேனி பூ மார்க்கெட்டில் பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டதால் வியாபாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் வாக்குவாதம்
தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் பலர் நேற்று பூக்களை கொண்டு வந்தனர். இதில் அரளி பூக்கள் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆண்டிப்பட்டி, சீலையம்பட்டி பூ மார்க்கெட்டுகளை விடவும் அரளி பூக்கள் ஒரு கிலோவுக்கு ரூ.150 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி, திருமலாபுரம், அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகளிடம் மற்ற மார்க்கெட்டுகளை போன்ற விலைக்கு பூக்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முயன்றனர்.
இதனால், விவசாயிகள் தங்களின் பூக்களை குறைவான விலைக்கு விற்பனை செய்ய விரும்பவில்லை என்று கூறி பூக்களுடன் அங்கிருந்து பஸ் நிலைய வளாகத்துக்கு வந்தனர். பின்னர் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தனர். அதிகாரிகள் நேரில் வருவதாக கூறினர். இதனால், விவசாயிகள் திரும்ப பூ மார்க்கெட்டுக்கு சென்று காத்திருந்தனர்.
கூடுதல் விலை கிடைத்தது
1 மணி நேரமாக விவசாயிகள் காத்திருந்தும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து அங்கு வந்த தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ் தலைமையில் விவசாயிகள், பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கூடுதல் விலைக்கு பூக்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் சம்மதித்தனர். அதன்பேரில் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “அரளி பூக்களை ஆண்டிப்பட்டி, சீலையம்பட்டி பூ மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.300-க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால், தேனியில் விலை நிர்ணயம் செய்வதில் இடைத்தரகர்கள் குறுக்கீடு உள்ளது. இதனால், விலை நிர்ணயத்தில் குளறுபடி நடக்கிறது. ஒரு கிலோ அரளி பூக்களை தேனியில் ரூ.120 முதல் ரூ.150 வரை தான் வாங்கினர். விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு கிலோ ரூ.250 என கொள்முதல் செய்தனர். எதிர்ப்பு தெரிவித்ததால் கிலோவுக்கு ரூ.100 கூடுதலாக கிடைத்துள்ளது. எனவே, பூ மார்க்கெட்டில் பூக்களை கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு இதுகுறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Related Tags :
Next Story