சினிமா படப்பாணியில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக பணம் மோசடி; பெண் உள்பட 2 பேர் கைது; தி.மு.க. பிரமுகர் தலைமறைவு


பெனிஷா சாரோ; விக்னேஷ்
x
பெனிஷா சாரோ; விக்னேஷ்
தினத்தந்தி 14 Dec 2020 1:34 AM IST (Updated: 14 Dec 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

சினிமா படப்பாணியில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான தி.மு.க. பிரமுகரை தேடி வருகின்றனர்.

வங்கியில் கடன்
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கணேஷ் சங்கர் (வயது 27). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு திருமணத்துக்காக வங்கி கடன் பெற முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்போது எனது செல்போனில் அழைத்த இளம்பெண், குறைந்த வட்டியில் வங்கியில் கடன் வாங்கி தருவதாகவும், இதற்காக இன்ஸ்சூரன்ஸ் தொகை 10 சதவீதம் தரவேண்டும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பி கடன் பெற சம்மதித்த நான், எனது ஆதார், டெபிட், பான் கார்டு ஆகியவற்றை அந்த பெண்ணிடம் கொடுத்தேன். ஆவணங்களை பார்த்த அவர், ரூ.4 லட்சம் கடன் பெறலாம். இதற்காக வங்கி கணக்கில் 10 சதவீத இன்ஸ்சூரன்ஸ் தொகையாக ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றார்.

அதன்படி நானும் ரூ.40 ஆயிரம் செலுத்தினேன். அதன்பிறகு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர். மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

போலி கால் சென்டர்
இது தொடர்பாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் அடையாறு சைபர் கிரைம் போலீசாருடன் வேளச்சேரி போலீசாரும் இணைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சேலையூர் சந்தோசபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போலியாக கால் சென்டர் நடப்பது தெரியவந்தது. போலி கால் சென்டர் நடத்தி வரும் பிரேம்குமார் (27) இணையதளம் மூலமாக வங்கி கடன் பெற முயற்சிப்பவர்களின் விவரங்களை சேகரித்து அந்த நபர்களுக்கு தனது மனைவி பெனிஷா சாரோ (23) மற்றும் கால் சென்டரில் உள்ள பெண்கள் மூலமாக செல்போனில் பேசி கடனுக்காக இன்சூரன்ஸ் என்று கூறி பணத்தை வாங்கிய பின் இணைப்புகளை துண்டித்து விடுவார்கள் என தெரியவந்தது.

2 பேர் கைது
இதையடுத்து பிரேம்குமாரின் மனைவி பெனிஷா சாரோ, கார் டிரைவரான செங்கல்பட்டை சேர்ந்த விக்னேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், லேப்டாப் போன்ற உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவான பிரேம்குமாரை தேடி வருகின்றனர். பிரேம்குமார் அப்பகுதி தி.மு.க. இளைஞரணி பிரமுகர் என கூறப்படுகிறது.

இதுபோல் வங்கி கடன், வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குமாரப்பாளையம், குளத்தூர் ஆகிய பகுதியில் இயங்கிய 2 போலி கால் சென்டர் கும்பலை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.

சினிமா படப்பாணி
நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை சினிமா படப்பாணியில் ஆவணங்கள் மூலம் பணம் மோசடி செய்த கும்பலை பிடித்த அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் தலைமையிலான தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், தென்சென்னை இணை கமிஷனர் பாபு ஆகியோர் பாராட்டினர்.

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி செல்போனில் அழைக்கும் நபர்களை நம்பவேண்டாம். வங்கிக்கு நேரடியாக சென்று கடன் பெற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story