உத்திரமேரூரில் புனரமைப்பு பணியின்போது, கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு


தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்ட உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோவிலை படத்தில் காணலாம்.
x
தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்ட உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோவிலை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 13 Dec 2020 8:20 PM GMT (Updated: 13 Dec 2020 8:20 PM GMT)

உத்திரமேரூரில் புனரமைப்பு பணியின்போது கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.

தங்கப்புதையல்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்தப் பகுதியில் 12-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலம் அடைந்து காணப்பட்டாலும் பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் 2 மாதத்திற்கு முன்பு இந்த கோவிலின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சேர்ந்து கோவிலை புனரமைக்க வேண்டும் என தீர்மானித்து குழு அமைத்தனர். கடந்த 10-ந் தேதி கணபதி ஹோமம், பாலாலயம் நடத்தி புனரமைப்பு பணியை தொடங்கினர்.

நேற்று முன்தினம் புனரமைப்பு பணியின்போது கருவறைக்கு முன்பாக உள்ள முன்வாசல் கருங்கல் படியை எடுத்து பார்த்தபோது அதற்கு கீழே துணியால் சுற்றப்பட்ட புதையல் இருப்பதை பார்த்தனர். துணியை பிரித்து பார்த்தபோது அதில் நெற்றிச்சுட்டிகள்-30 தங்க ஒட்டியாணம்-1, குண்டுமணி-29, உடைந்த நிலையிலான ஆரம் துண்டுகள்-5, சிறிய வடிவிலான பிறை-1, லட்சுமி உருவம்-1, ஒட்டியாண தகடு-3 என 561 கிராம் தங்க நகைகள் இருந்தன.

கருவூலத்தில் ஒப்படைப்பு
இது குறித்து உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் இது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். தங்கப்புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி கூறினார். அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தனர். காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. வித்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்கப்புதையலை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்று பொதுமக்களிடம் அவர் கூறினார்.

ஆனால் பொதுமக்கள் அதற்கு உடன்படாமல் கோவில் புனரமைப்பு பணிக்குதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் தங்கப்புதையலை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க சம்மதித்தனர். இதையடுத்து தங்கப்புதையல் உத்திரமேரூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story