சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் அரசனூர், மதகுபட்டியில் புதிய கால்நடை கிளை நிலையங்கள்; அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்


புதிய கால்நடை கிளை நிலையத்தை அமைச்சர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த போது எடுத்தபடம்
x
புதிய கால்நடை கிளை நிலையத்தை அமைச்சர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த போது எடுத்தபடம்
தினத்தந்தி 14 Dec 2020 4:11 AM IST (Updated: 14 Dec 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

அரசனூர், மதகுபட்டியில் புதிய கால்நடை கிளை நிலையங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

தொடக்க விழா
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், அரசனூர் மற்றும் மதகுபட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய கால்நடை கிளை நிலையம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் புதிதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை நிலையங்களை திறந்து வைத்து கூறியதாவது:-

அரசனூர் மற்றும் மதகுபட்டி பகுதியில் அதிகளவு கால்நடை வளர்ப்பவர்கள் உள்ளதால் இப்பகுதிகளில் கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் 2 ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கான கிளை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கே வந்து சிகிச்சை
ஏற்கனவே சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் கால்நடைகளுக்கான தலைமை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 78 கால்நடைகளுக்கான கிளை மருந்தகங்களும், 46 கிளை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. விரைவில் தேவையான இடங்களில் கிளை நிலையங்கள் அமைக்கப்படும்.

தமிழக அரசு அறிவித்துள்ள கால்நடை சிகிச்சைக்கான சிறப்பு ஊர்தி அனைத்து மருத்துவ வசதியுடன் தயார்நிலையில் உள்ளது. 1962 கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக அழைத்தவரின் வீட்டிற்கே சென்று கால்நடைக்கு தேவையான சிகிச்சை அங்கேயே வழங்கப்படும். உயர் சிகிச்சை தேவைப்பட்டால் கால்நடைகளை அதேவாகனத்தில் அழைத்துவர தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாதுஉப்புக்கலவை உணவுப்பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மரு.முருகேசன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்மணிபாஸ்கரன், துணைத்தலைவர் சரஸ்வதி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, இந்து சமய அறநிலையக்குழு மாவட்டத்தலைவர் சந்திரன், மாவட்ட சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story