ஆண்டிமடம் அருகே பரிதாபம்: மீன்பிடிக்க சென்ற ஓட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி பலி
ஆண்டிமடம் அருகே மீன்பிடிக்க சென்ற ஓட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(வயது 36). இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவர் அதே கிராமத்தில் உள்ள நந்ததேவன் ஏரி அருகே ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். அந்த ஓட்டலில் தினமும் மதிய உணவில் மீன் குழம்பு சாப்பாடு இடம்பெறுவது வழக்கம். அதற்காக அருகில் உள்ள நந்ததேவன் ஏரியில் மீன்பிடித்து சமைப்பதை முரளி வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை ஏரிக்கு சென்று மீன்பிடிக்க வலையை ஏரியில் வீசிவிட்டு வந்தார். பின்னர் இரவு 10 மணியளவில் தனது வீட்டிலும், நண்பர்களிடமும் வலையில் மீன் சிக்கியுள்ளதா? என்று பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இது பற்றி ரஞ்சிதா மற்றும் அவருடைய மகன்கள், முரளியின் நண்பர்களிடம் கூறியுள்ளனர். இந்த தகவல் கிராமத்தில் பரவியதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது, கரையில் முரளியின் கைலி மற்றும் செருப்புகள் இருந்தன.
சாவு
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஏரிக்குள் இறங்கி இரவு முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் முரளி கிடைக்கவில்லை. இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கும், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், இளைஞர்களுடன் சேர்ந்து ரப்பர் படகு மூலம் ஏரியில் முரளியை தீவிரமாக தேடினர். ரஞ்சிதா, அவரது மகன்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏரிக்கரையில் சோகத்துடன் கூடியிருந்தனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு நேற்று மதியம் 12 மணியளவில் ஏரியின் சகதியில் சிக்கியிருந்த முரளியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மீன்பிடிக்க சென்றபோது முரளி சகதியில் சிக்கி ஏரியில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ரஞ்சிதா, அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் முரளியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story