திருச்சி உறையூர் பகுதியில் மழைநீர் குட்டை போல் தேங்கி நோய் பரவும் அபாயம்
திருச்சி மாநகரில் நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கத்தின் தொடர்ச்சியாக சில நாட்கள் மழை கொட்டி தீர்த்தது.
திருச்சி,
மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், பல இடங்களில் வீடுகளை சூழ்ந்தும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி, வடிய வழியில்லாமல் கிடக்கிறது. அவ்வாறு தேங்கிய தண்ணீர் பச்சைநிறமாக மாறி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகும் கேந்திரமாகவும், பாம்பு உள்ளிட்ட பூச்சிகளின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது.
உறையூர் பகுதி
திருச்சி உறையூர் 60-வது வார்டுக்கு உட்பட்ட வெக்காளியம்மன் கோவில் முன்புள்ள பிரதான சாலை, சமீபத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் தார்சாலை மறைந்து மண்சாலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் புயல் காரணமாக பெய்த மழையால் உறையூர் பகுதியில், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் சாலைகள் மேலும் சேதமடைந்து பல்லாங்குழிகள் போல காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் நடமாட முடியாத வகையிலும், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையிலும் இந்த சாலை மாறியுள்ளது. பாத்திமா நகர் செல்லும் சாலை, பாத்திமா நகர் விஸ்தரிப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் எல்லாம் படுமோசமாக காட்சி அளிக்கிறது.
பச்சை நிறத்தில் குட்டை
பாத்திமாநகர் விஸ்தரிப்பு பகுதியில் சில இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து குட்டைபோல தேங்கி கிடக்கிறது. அவை பச்சைநிறத்தில் கிடப்பதால், அங்கு டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி கேந்திரமாகவே மாறி உள்ளது. அத்துடன் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதி மக்கள், குட்டையில் இருந்து பாம்புகள் பலவற்றை அடித்து கொன்றிருக்கிறோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.
அரியமங்கலம்
மேலும் எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஹெல்த் காலனி, பாரதி மின்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் சாலைகள் மோசமாக இருக்கிறது. இதேபோல் திருச்சி அரியமங்கலம் முதல் உள்ளூர் அரியமங்கலம் மந்தை வரையிலான 2 கிலோ மீட்டர். சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பிரதான சாலையின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் அவ்வழியே நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
மோசமான நிலையில் உள்ள சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கவும், குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story