தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் 4 பேர் பலி: தலைமறைவான லாரி டிரைவர் கைது


தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் 4 பேர் பலி: தலைமறைவான லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2020 8:39 AM IST (Updated: 14 Dec 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். இது தொடர்பாக தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி, 

ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஏற்கனவே போக்குவரத்து பாதிப்பால் சாலையில் நின்று கொண்டு இருந்த 12 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு சரக்கு வேன் மீது சிமெண்டு பாரம் ஏற்றி வந்த லாரி அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் நகரை சேர்ந்த மதன்குமார் (வயது 42), ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (38), மோட்டார் சைக்கிளில் வந்த தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்த கண்ணன் (40), கோவையை சேர்ந்த நித்யானந்தம் (35) ஆகிய 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

டிரைவர் கைது

இந்த விபத்து நடந்ததும் லாரி டிரைவர் ஜார்கண்ட் மாநிலம் கிருடி மாவட்டத்தை சேர்ந்த குத்புதீன் (32) என்பவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் கார் உள்ளிட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று தொப்பூர் பகுதியில் இருந்த லாரி டிரைவர் குத்புதீனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன மேலாளர்

இந்த விபத்தில் இறந்த மதன்குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சென்னைக்கு டிரைவர் கார்த்திக்குடன் சென்று விட்டு மீண்டும் தர்மபுரி வழியாக ஓமலூருக்கு வந்துள்ளார். அப்போது தொப்பூர் கணவாயில் லாரி மோதிய விபத்தில் மதன்குமார் மற்றும் டிரைவர் கார்த்திக் ஆகிய 2 பேரும் இறந்தனர். மேலும் மதன்குமார் பாரதிய இந்து பரிவார் அமைப்பின் சேலம் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story