தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்


தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 14 Dec 2020 9:39 AM IST (Updated: 14 Dec 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

சேவூர் அருகே அமைய உள்ள தொழில் பூங்கா வுக்கு (சிப்காட்) எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக சென்று பொதுமக்கள் துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.

சேவூர், 

சேவூர் அருகே தத்தனூர் புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா(சிப்காட்) அமைய முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை வருவாய் துறையினர் கடந்த 1-ந்தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தொழில் பூங்கா அமைத்தால் எங்களது விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இப்பகுதியில் தொழில் பூங்கா வேண்டாம் என கடந்த 3-ந்தேதி அவினாசி சட்டமன்ற அலுவலகத்தின் முன்பு ஒன்று திரண்டு மனு அளித்தனர். இதை தொடர்ந்து தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சிகளில் பொதுமக்கள் ஒன்று திரண்டு தொழில் பூங்கா வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி 3 ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 ஊராட்சிகளிலும் தொழில் பூங்கா வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் சுமார் 400 பேர் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் சென்று மனு அளித்தனர்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட அடி பெருமாள் கோவிலில் தொழில் பூங்கா எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டம் நடைபெற்றது. தொழில் பூங்கா இப்பகுதிக்கு வந்தால், அதனால் வரும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்குவது. குறிப்பாக தத்தனூர் ஊராட்சியை சுற்றியுள்ள போத்தம்பாளையம், பாப்பாங்குளம், வடுகபாளையம், நடுவச்சேரி, அய்யம்பாளையம், குப்பாண்டாம்பாளையம், துலுக்கமுத்தூர், எம்மாம்பூண்டி, போலவபாளையம், அஞ்சனூர், வேமாண்டாம்பாளையம், மங்கரசு வலையபாளையம், முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம், சேவூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் தொழில் பூங்கா வேண்டாம் என்ற விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்குவது.

சுவரொட்டிகள்

அனைவருக்கும் செல்போனில் வாட்ஸ்-ஆப் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கூட்டத்தில் முதல் கட்டமாக 5 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்குவது, 1000 சுவரொட்டிகள் அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளில் ஒட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நிர்வாகக்குழு, ஆலோசனைக்குழு உள்பட 5 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story