திருச்செந்தூர் பகுதியில் செம்மண் திருட்டால் விவசாயம்- நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு; கலெக்டர் அலுவலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்
x
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்
தினத்தந்தி 15 Dec 2020 1:00 AM IST (Updated: 14 Dec 2020 10:40 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் செம்மண் திருட்டால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டகலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

குறை தீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கடந்த இரண்டு வாரங்களாக காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. நேற்று வழக்கம்போல் காணொலிகாட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். பொதுமக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து காணொலி மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கையை தெரிவித்தனர். அவர்கள் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.

அதே நேரத்தில் சிலர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கோமதி அம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை
எனது மகன் கண்ணன் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்டிட வேலை கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டார். இதனால் கடந்த 21.10.20 அன்று தருவை குளத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க செல்வதாக கூறிச் சென்றார். கடந்த 26.10.20 அன்று எனது மகன் கண்ணன் படகிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனது மகன் சாவில் மர்மம் 
இருப்பதாக தெரிகிறது. ஆகையால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைகிணறு சமூக ஆர்வலர் கண்ணன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- மேலத்திருச்செந்தூர் கிராமம் நடுநாலுமூலைகிணறு பகுதியிலும், கீழநாலுமூலைகிணறு பகுதியிலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான குன்றுமேல் சாஸ்தா கோவில் பகுதியிலும், மேலஅரசூர் பகுதியிலும் சட்டவிரோதமாக தேரி செம்மண் திருடப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் விவசாயமும், நிலத்தடி நீர் மட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் இப்பகுதியில் நடக்கும் செம்மண் திருட்டை தடுத்து, விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘திருச்செந்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. 
விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

சிறப்பு மொபட்
தூத்துக்குடி மாவட்ட தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு மாவட்ட பிரதிநிதி மகாராஜன் தலைமையில் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், ‘தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கான சிறப்பு மொபட் வழங்க வேண்டும். மாத உதவித் தொகை ரூ. 5 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். 

முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். தண்டுவட காயத்தை பல்வகை ஊனமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

மழைநீர் வடிகாலை...
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் பேரூராட்சி 4-வது வார்டில் கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் எங்கள் பகுதியில் ரூ.65 லட்சம் செலவில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த வடிகால் ஊருக்குள் உள்ள தண்ணீர் வெளியில் செல்லும் வகையில் அமையாமல், வெளியில் உள்ள தண்ணீர் ஊருக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பயன்படும் விதத்தில் மழைநீர் வடிகால் உயரத்தை அதிகப்படுத்தி தண்ணீர் அருகில் உள்ள அமராவதி குளத்துக்கு செல்லும் வகையில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

Next Story