பணகுடி அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் புகுந்து 40 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பணகுடி அருகே கலந்தபனையில் கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
x
பணகுடி அருகே கலந்தபனையில் கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 15 Dec 2020 1:45 AM IST (Updated: 14 Dec 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

விவசாயி
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த கலந்தபனையைச் சேர்ந்தவர் வேலு (வயது 55), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.

நேற்று முன்தினம் வெளியூரில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வேலு தன்னுடைய மனைவியுடன் புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவர்களது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி நள்ளிரவில் வேலுவின் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து நுழைந்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

போலீசார் விசாரணை
நேற்று காலையில் வேலு தன்னுடைய மனைவியுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தங்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

மற்றொரு சம்பவம்
இதேபோன்று பணகுடி அருகே ஆவரைகுளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (26) என்பவர் காவல்கிணறு சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் முத்துகிருஷ்ணன் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் முத்துகிருஷ்ணனின் கடையின் சிமெண்டு தகடாலான மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து கடையில் பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

நேற்று காலையில் முத்துகிருஷ்ணன் தனது கடைக்கு சென்றபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்ததையும், பீரோவில் இருந்த பணம் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகார்களின்பேரில், பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பணகுடி அருகே ஒரே நாள் இரவில் வீடு, கடை ஆகியவற்றில் நடந்த துணிகர திருட்டு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story