20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.க.-வன்னியர் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்; கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் பா.ம.க.-வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண் டும், தமிழ்நாடு அரசு பணியிடங் களில் வன்னியர்களுக்கு கிடைத்த இடங்கள் எவ்வளவு? என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கிராம நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துராமன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் வி.ஜெ.பாண்டியன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.சாம்பால், மாணவரணி செயலாளர் செஞ்சி செ.ரவி, துணை செயலாளர் பா.வெங்கடேசன், வக்கீல்களுக்கான சமூக நீதி பேரவை தலைவர் பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார்.
தொடர் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டத்தின்போது ஜி.கே.மணி பேசியதாவது:-
தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் வன்னியர்கள் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், வன்னியர்களின் நலனுக்காகவும் 20 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும், 30-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும், ஜனவரி 7-ந்தேதி நகராட்சி அலுவலகம் முன்பும், 21-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பும் தமிழகம் தழுவிய அளவில் அடுத்தடுத்த போராட்டங்களை பா.ம.க. நடத்தவிருக்கிறது. எனவே எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சர் உடனடியாக ஏற்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மனு அளித்தனர்
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க.வினர் அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகம் சென்று, அங்கு கிராம நிர்வாக அதிகாரி சிவாவிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கினர். இதேபோல தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 622 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்துள்ளதாக அப்போது ஜி.கே.மணி குறிப்பிட்டார்.
ஏற்கனவே 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை சென்னையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story