8 மாதங்களுக்கு பிறகு, மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறப்பு; சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்


மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் அருகே செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
x
மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் அருகே செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 15 Dec 2020 1:00 AM IST (Updated: 15 Dec 2020 12:13 AM IST)
t-max-icont-min-icon

8 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா வந்த பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வழிகாட்டி நெறிமுறை
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களும் நேற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

குறைந்த அளவு பயணிகள்
தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்ட்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்பதால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டிருந்தது. நேற்று வந்த பயணிகள் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி அங்குள்ள பார் கோடு பலகையில் ஸ்கேன் செய்து அதனை புராதன சின்ன நுழைவு வாயில் மையங்களில் காண்பித்து புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். முதல் நாளான நேற்று குறைவான பயணிகளே காணப்பட்டனர்.

குறிப்பாக 8 மாதங்களுக்கு பிறகு வந்த பயணிகள் பலர் மகிழ்ச்சியுடன் புராதன சின்னங்கள் முன்பு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக புராதன சின்னங்கள் நேற்று காலை 8 மணிக்கு திறப்பதற்கு முன்பாக மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அனைத்து புராதன மையங்களிலும் கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story