பா.ஜனதாவுடன் கூட்டணி சேர திடீர் தயக்கம்? சனிப்பெயர்ச்சிக்குப் பின் கூட்டணி முடிவு: என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி திட்டம்
பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர ரங்கசாமி தயங்குவதாக கூறப்படுகிறது. சனிப்பெயர்ச்சிக்கு பின் கூட்டணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் உரசல்
புதுவையில் தற்போது தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.
அதாவது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அதன் அமைப்பாளர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக சென்னைக்கு சென்று சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவும் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
பா.ஜ. பொறுப்பாளருடன் சந்திப்பு
ஆளுங்கட்சி வரிசையில் இந்தநிலை என்றால் எதிர்க்கட்சி வரிசையிலும் கூட்டணி என்பது இன்னும் முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணி தொடரும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த கூட்டணி புதுவையிலும் தொடர அதிக வாய்ப்பு உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இந்த கூட்டணியில் இடம்பெறுமா? என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளிடையே இப்போது எழுந்துள்ளது. கட்சியின் நிறுவன தலைவரான ரங்கசாமி சமீபத்தில் புதுவை வந்த பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்துப் பேசினார். ஆனால் கூட்டணி தொடர்பாக உறுதியான முடிவு எதையும் இன்னும் அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
முட்டுக்கட்டை போடும் உத்தரவாதம்
மற்ற கட்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு தேர்தல் பணிகளில் பா.ஜ.க. முந்திக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதையொட்டி ஆள் சேர்க்கும் முயற்சியாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தொகுதிகளில் பிரபலமானவர்களை தொடர்புகொண்டு தங்கள் கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது.
இதை ஏற்று பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுவே தற்போது என்.ஆர்.காங்கிரஸ்- பாரதீய ஜனதா கூட்டணிக்கு முக்கிய முட்டுக்கட்டையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதீய ஜனதா அளிக்கும் இதுபோன்ற உத்தரவாதமானது கூட்டணி கட்சியில் உள்ள முக்கிய பிரமுர்கள் போட்டியிடுவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் செய்து விடும் என்று என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.
கேள்விக்குறியாகும் சிறுபான்மை ஓட்டுகள்
அதுமட்டுமின்றி கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின்போது பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்ததுதான் என்.ஆர்.காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்று ரங்கசாமியிடம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதேபோல் சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வை கூட்டணி சேர்த்தால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் விழுவது கேள்விக்குறியாகி விடும் என்றும் அவருக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அதுபோன்ற கட்டாயம் ஏற்பட்டால் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆரூடம் கூறியுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்ததால் ரங்கசாமியின் தொகுதியைத் தவிர (இந்திராநகர்) அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை விட
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி குறைவான வாக்குகள் பெற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சனிப்பெயர்ச்சி
இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ரங்கசாமிக்கு பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதற்கு திடீரென தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டணிக்குள் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது? அதனால் தேர்தல் வெற்றிக்கான சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் ரங்கசாமி அலசி ஆராய்ந்து வருவதாகவும் அவருக்கு நெருக்கமான கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றி முடிவு செய்து கூட்டணி குறித்த தனது முடிவினை சனிப்பெயர்ச்சிக்குப் பின் அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.
புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் சனிப்பெயர்ச்சியை எதிர்நோக்கி உள்ளனர். அதற்குப் பின் கட்சிமாறும் படலம் அரங்கேறும் என்பதால் தற்போது அமைதியாக உள்ள அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
Related Tags :
Next Story