புதுவை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 25 பொட்டலங்கள் பறிமுதல்


கஞ்சா விற்ற வாலிபர்களையும் (கைகட்டி நிற்பவர்கள்) பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகளையும் படத்தில் காணலாம்
x
கஞ்சா விற்ற வாலிபர்களையும் (கைகட்டி நிற்பவர்கள்) பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகளையும் படத்தில் காணலாம்
தினத்தந்தி 14 Dec 2020 7:53 PM GMT (Updated: 14 Dec 2020 7:53 PM GMT)

புதுவை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 775 கிராம் எடை கொண்ட 25 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவில் அருகில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை உள்ளது. இதன் அருகில் உள்ள பஸ்நிறுத்தத்தில் நேற்று மதியம் 3 பேர் நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஜித், வெங்கடாஜலபதி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள், காவலர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த உடன் அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் வெவ்வேறு திசையில் ஒட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவர்கள் 2 பேரிடம் சோதனை நடத்திய போது அவர்களிடம் 10 கிராம் எடையுள்ள 25 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், ஒரு பொட்டலத்தை ரூ.400க்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

25 பொட்டலங்கள் பறிமுதல்
உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் சத்யமூர்த்தி(வயது 22), சாரங்கபாணி என்பவரது மகன் சரவணன்(21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களின் வீட்டில் இருந்து 525 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதன் மூலம் மொத்தம் 775 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது தப்பி ஓடியது அதே பகுதியை சேர்ந்த பிரதீப்(25) என்பதும், அவரின் மூலமாக சென்னையில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story