வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி மனு; கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்தனர்


கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மனு அளிக்க மாட்டு வண்டியில் வந்த பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர்.
x
கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மனு அளிக்க மாட்டு வண்டியில் வந்த பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர்.
தினத்தந்தி 14 Dec 2020 8:13 PM GMT (Updated: 14 Dec 2020 8:13 PM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.

கிராம நிர்வாக அலுவலரிடம் மனு
தமிழக அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி இந்த மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்்ந்து நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் உள்ள பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் பா.ம.க மாவட்ட துணைச் செயலாளர் காயரம்பேடு தேவராஜ் தலைமையில் ஒன்றிய பொருளாளர் பூர்ணிமா சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.சண்முகம், நிர்வாகிகள் ஜி.புருஷோத்தமன், பார்த்தீபன் நதியா ஆகியோர் முன்னிலையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த மகளிரணி, இளைஞரணியை சேர்ந்த ஏராளமானவர்கள் காயரம்பேடு கூட்ரோடு பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் பதாகை ஏந்தி, கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக காயரம்பேடு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரிடம் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த 1,110 பேர் கையெழுத்து போட்ட கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அதிகாரி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மனுவை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். இதேபோல காட்டாங்கொளத்தூர், நின்னகரை, நந்திவரம், ஊனமாஞ்சேரி, வண்டலூர், கல்வாய், உள்பட பல்வேறு கிராமங்களில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மதுராந்தகம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன் தலைமையில் மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், சதீஷ், சங்கர், சுகந்திசங்கர் ஆகியோர் முன்னிலையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் கையொப்பம் பெற்று கிராம நிர்வாக அலுவலர் தனபாக்கியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்

இதில் நிர்வாகிகள் ஜோதி, முருகன், செல்வம், சகாதேவன், பரத், வேலு, செல்வமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் பொதுமக்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

இதேபோல் இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் கணபதி தலைமையில் சூனாம்பேடு ஊராட்சியை சோந்த மூர்த்தி தலைமையில் அந்தந்த கிராமங்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் பா.ம.க. நிர்வாகிகள் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில். திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம். கொண்டமங்களம் போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினர் கோஷங்கள் எழுப்பியப்படி ஊர்வலமாக வந்து சிங்கப் பெருமாள் கோவில் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

இதில் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சத்யா, கிழக்கு ஒன்றிய செயலாளர் திவாகரன் தலைமை தாங்கினர். தொகுதி அமைப்பு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட அமைப்பு செயலாளர் பசுபதி, ஒன்றிய தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

படப்பை
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் படப்பை கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு குன்றத்தூர் வடக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சடகோபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் படப்பை பஜார் வீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி முழக்கங்கள் எழுப்பியவாறு படப்பை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனுவை அளித்தனர். இதேபோல் சாலமங்கலம் கிராமத்தில் இருந்து ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு சாலமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் அருள் அரசுவிடம் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு அளித்தனர்.

இதேபோல் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோகல் வாடி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கும் அறவழி போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் காட்டுகரணை த.ராஜசேகர் தலைமை தாங்கினார். வன்னியர் சங்கத்தினர் பா.ம.க.வினர் காட்டு கரணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மோகல்வாடி வரை ஊர்வலமாக சென்றனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ஆத்துர் வா.கோபால கண்ணன் தலைமையில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், அச்சரப்பாக்கம் மத்திய ஒன்றிய பா.ம.க செயலாளர் ராஜசேகர், இளம் பெண்கள் சங்க மாநில துணை செயலாளர் குனசுந்தரி குமார் உள்பட நிர்வாகிகள் மோகல் வாடி கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் மனு கொடுத்தனர்.

இதேபோல் பா.ம.க இளைஞரணி மாவட்ட செயலாளர் தேவராஜன் தலைமையில் வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று எலப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் மனு அளித்தனர்.

சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் மற்றும் செம்மஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் மோகனசுந்தரம் தலைமையில் மனு வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் நிர்மல்குமார், பகுதி செயலாளர் ரகு, மோகன்ராம், எத்திராஜ், சக்கரபாணி, உதயகுமார், செல்வம், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story