வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, ஈரோட்டில் விவசாயிகள்- அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்; எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் தொடங்கி வைத்தனர்


ஈரோட்டில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரை படத்தில்
x
ஈரோட்டில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரை படத்தில்
தினத்தந்தி 14 Dec 2020 10:45 PM GMT (Updated: 14 Dec 2020 10:45 PM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஈரோட்டில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தை எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காத்திருப்பு போராட்டம்
மத்திய அரசு அமல் படுத்தி உள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார மசோதா 2020-ஐ சட்டமாக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுடெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டு கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து செல்கிறது. அதன்படி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஈரோட்டில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நேற்று ஈரோடு 
பெருந்துறை ரோடு மேம்பாலம் பகுதியில் தனியார் இடத்தில் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினார்கள்.

ஆனால், அதற்கும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி, அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள். அதைத்தொடர்ந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ்சூப்பிரண்டு சண்முகம் ஆகியோர் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தனியார் இடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும், காலை முதல் மாலை 6 மணி வரை மட்டுமே போராட்டம் நடத்தப்படும் என்றும் 
போராட்டக்குழுவினர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

எம்.பி.க்கள் தொடங்கி வைத்தனர்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். மூத்த விவசாயி காசியண்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் பா.செல்வராஜ், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பல்வேறு கட்சியினர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

தி.மு.க. சார்பில் துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் குமாரசாமி, பொ.ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மக்கள் ஜி.ராஜன், ஈ.பி.ரவி, எஸ்.வி.சரவணன், நிர்வாகிகள் விஜயபாஸ்கர், கே.என்.பாட்ஷா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொறுப்பாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா, செயலாளர் ஆர்.கே.சண்முகவேல் உள்பட வணிக சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அகில இந்திய 
விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கி.வே.பொன்னையன், சி.எம்.துளசிமணி, சுப்பு, முத்துசாமி, எஸ்.பொன்னையன், அறச்சலூர் செல்வம், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கண.குறிஞ்சி, த.சண்முகம், நிலவன் உள்பட ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 100-க்கும் மேற்பட்ட பெண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மதியம் அனைவருக்கும் போராட்டக்குழு மூலம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாலை 6 மணிக்கு போராட்டம் நிறைவடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

போராட்டத்தை முன்னிட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகம், காலிங்கராயன் விருந்தினர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story