டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் காத்திருப்பு போராட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 4:24 AM IST (Updated: 15 Dec 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர், அரியலூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அரியலூர்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழுவினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து கட்சிகள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் மாணவர், இளைஞர் மன்றம், மாதர் சங்க கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் கூடினர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அமருவதற்கு நாற்காலிகள் போட்டனர். அவற்றை போடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலையோரத்தில் நாற்காலிகள் போட்டு, அதில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்

மேலும் போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக சாலையின் ஒருபுறத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை கொண்டு வரக்கூடாது, விவசாயிகள் விரோத சட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இன்றும், நாளை

இதில் மாவட்ட தி.மு.க. ெசயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, த.மு.மு.க., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும், தமிழக விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், திராவிடர் கழகம், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டுப்புற பாடல்களை கலைஞர்கள் பாடி மகிழ்வித்தனர். இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக விவசாயிகள், அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், காங்கிரஸ் நகர செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Next Story