விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. துரை. ரவிக்குமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தனியார் செல்போன் நிறுவனத்தை முற்றுகையிட்டு அங்கு சாலை மறியல் போராட்டமும் நடத்தினார்கள். அப்போது அவர்கள் தனியார் நிறுவனத்தின் தயாரிப்பு செல்போன் ஒன்றை உடைத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
சுசி கம்யூனிஸ்டு-மக்கள் நீதி மய்யம்
இதேபோல் புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகம் முன்பு சுசி கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் சுசி கம்யூனிஸ்டு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். இதில் மக்கள் நீதி மய்யத்தின் பிராங்க்ளின் பிரான்சுவா மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story