9 மாதங்களுக்கு பிறகு சித்தன்னவாசல் சுற்றுலா தலம் திறப்பு முதல் நாளிலேயே ஆர்வமாக வந்த மக்கள்


9 மாதங்களுக்கு பிறகு சித்தன்னவாசல் சுற்றுலா தலம் திறப்பு முதல் நாளிலேயே ஆர்வமாக வந்த மக்கள்
x
தினத்தந்தி 15 Dec 2020 5:47 AM IST (Updated: 15 Dec 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

9 மாதங்களுக்கு பிறகு சித்தன்னவாசல் சுற்றுலா தலம் நேற்று திறக்கப்பட்டது. முதல்நாளிலேயே ஆர்வமாக மக்கள் வந்தனர்.

அன்னவாசல், 

கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதியில் சுற்றுலா தலம் மூடப்பட்டது. இதனையடுத்து தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து 9 மாதங்களுக்கு பிறகு நேற்று சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சித்தன்னவாசல் சுற்றுலா தலம் நேற்று திறக்கப்பட்டது. தென்னிந்தியாவின் அஜந்தாகுகை என்று அழைக்கப்படும் இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை, படகுகுளம், உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன முறையில் இசை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இணையவழி நுழைவுச்சீட்டு

மேலும் கையை சுத்தப்படுத்த தண்ணீர் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் சமணர் குடவரை கோவில், ஏழடிபட்டம் மலைமீது சுற்றி பார்ப்பதற்கும் கடந்த மார்ச் மாதம் முன் வரை கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று முதல் நுழைவு சீட்டு இணையவழியாக மட்டுமே வழங்கப்படும் என இந்திய தொல்பொருள் துறை சார்பில் அறிவிக்கப்பட்டதால் சில சுற்றலா பயணிகள் சிரமம் அடைந்தனர். சிலர் தங்களது செல்போன் மூலம் இணைய வழியில் பணம் செலுத்தி அனுமதி பெற்று சென்றனர். சில சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர்.

கடந்த 9 மாதங்களாக சித்தன்னவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டிருந்ததால் அங்கு அதிக அளவு காணப்படும் குரங்குகள் உண்ண உணவின்றி தவித்து வந்தது. இந்த நிலையில் நேற்று சுற்றுலா தலம் திறந்துள்ளதால் உள்ளே வந்த சுற்றுலா பயணிகளிடம் கையில் இருந்த பொருட்களை குரங்குகள் பிடிங்கி தின்றது.

Next Story