கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கஞ்சி தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கஞ்சி ெதாட்டி திறந்து விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஒரு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். இதில் திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ், பொருளாளர் சந்தனமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அடுப்பை பற்ற வைத்து கஞ்சி தொட்டித் திறக்க போலீசார் அனுமதி மறுத்தனர்.
தி.மு.க.-காங்கிரஸ்
இதில் அயிலை சிவசூரியன், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி மற்றும் விவசாய அணி நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், மாநில கமிட்டி உறுப்பினர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், தமிழ்மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் பறை அடித்தடி, வேளாண் திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாடல்களாக பாடினர்.
100 பேர் கைது
போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக சாலையில் போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வரும் வகையில் சாலைகள் பேரிகாட் போட்டு மூடப்பட்டன. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல போலீசாரால் அனுமதிக்கப்படவில்லை. சாலை மூடப்பட்டதால் அவ்வழியே போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 100 பேரை திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story