வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கோவையில் காத்திருப்பு போராட்டம்; 87 விவசாயிகள் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய 87 பேர் கைது செய்யப்பட்டனர். ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் திரண்டனர். பின்னர் அங்கு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமைதாங்கினார். பின்னர் அவர்கள் அங்கு முற்றுகையிட முயன்றனர். இதில் 200-க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது சு.பழனிசாமி கூறியதாவது:-
இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரம் விவசாயத்தில்தான் உள்ளது. விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படாவிட்டால் விவசாயம் அழிந்து விடும். தற்போது கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயத்தை வீழ்ச்சி அடைய வைக்கும். இந்த வகையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடக்கிறது. தமிழகத்திலும் போராட்டத்துக்கு ஆதரவு வலுக்கிறது. டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் அதிகாரிகளும் மத்திய அரசை கண்டித்து கலந்து கொள்கின்றனர். கோவையைப் போல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் மட்டுமின்றி, பல தரப்பு மக்களும் ஆதரவு கொடுத்துள்ளனர். நாங்கள் கைது செய்யப்பட்டாலும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்.
இவ்வாறு அவர்கூறினார்.
87 பேர் கைது
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சு.பழனிசாமி, ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், இளைஞர் அணி மாநில செயலாளர் வே. ஈசுவரன், அ.சேதுபதி, கணபதி செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கனகரத்தினம், ரமேஷ், வடிவேலு மற்றும் விவசாயிகள் உள்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியினர் 70 பேர் கைது
இதுபோன்று புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று காலைமனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு தலைமையில் கோவை ரெயில் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி ரெயில் நிலையத்துக்குள் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அவர்கள் போலீசாரையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story