செஞ்சியில் துணிகரம்: வங்கியில் ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
செஞ்சியில் வங்கியில் ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் கொள்ளையடித்ததோடு, கேமரா காட்சிகளை அழித்து சாமர்த்தியமாக தப்பிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் எக்விடாஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த சனிக்கிழமை மாலை பணி முடிந்ததும் வங்கி ஷட்டரை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் வங்கி ஊழியர் கார்த்தி, வங்கியை திறக்க வந்தார். அப்போது வங்கியின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி வங்கி உயர் அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வங்கி அதிகாரிகளும், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசாரும் விரைந்து வந்து வங்கிக்குள் சென்று பார்த்தனர்.
2 லாக்கர்களை காணவில்லை
அப்போது வங்கியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பணம் வைத்திருந்த 2 லாக்கர்களை காணவில்லை. இதையடுத்து வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் கேமரா காட்சி பதிவாகும் ‘ஹார்டு டிஸ்க்குகளையும்’ காணவில்லை. அந்த லாக்கர்களில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது வங்கியில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர்.
கொள்ளை
கடந்த சனிக்கிழமை வங்கி ஊழியர்கள் கதவை பூட்டிச்சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஷட்டர் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் வங்கிக்குள் சென்ற அவர்கள், ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் வைத்திருந்த 2 லாக்கர்களையும் தூக்கிச்சென்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், போலீசிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அழித்ததோடு, காட்சிகள் பதிவாகி இருந்த ‘ஹார்டு டிஸ்க்குகளை’யும் திருடிச்சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் வங்கியின் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வங்கியில் 2 லாக்கர்களுடன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story