வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் 72 பேர் கைது


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் 72 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2020 8:48 AM IST (Updated: 15 Dec 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூரில் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 72 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விவசாய சங்கங்கள் சார்பில் 14-ந் தேதி (அதாவது நேற்று) காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டனர். இதையடுத்து விவசாய சங்கத்தினர் காலை 11 மணி அளவில் மஞ்சக்கப்பத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பி.துரை, மாநில குழு உறுப்பினர் குளோப், கடலூர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பிச்சை, பொருளாளர் செல்லசெந்தில், விவசாய சங்க நிர்வாகிகள் மதியழகன், லாரன்ஸ், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், கற்பனை செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இதேபோல் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் 3 பேர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாயிகளை வஞ்சிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு சென்றனர். அப்போது அங்கு பல்பொருள் அங்காடி மூடப்பட்டிருந்ததால், அவர்கள் பல்பொருள் அங்காடி அருகில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

சங்கு ஊதும் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்களரசு கட்சியின் சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் நிரபு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கலைநேசன், மதன், தொகுதி செயலாளர் வினோத், மாணவரணி மாவட்ட செயலாளர் ராகுல், பரங்கிப்பேட்டை நகர செயலாளர் முகமது சலீம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கடலூரில் நேற்று தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story