பாபநாசத்தில் 2 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் 100 பேர் கைது
பாபநாசத்தில் 2 இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்,
வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி தஞ்சையில் நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாபநாசத்தில் இருந்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் பாபநாசம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் வேன்கள் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களில் தஞ்சை செல்ல அனுமதியில்லை என கூறினர். இதனை தொடர்ந்து பாபநாசம் தெற்கு ராஜவீதி மெயின் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன் தலைமையிலும், பாபநாசம் புதிய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த 2 இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்மாப்பேட்டை
வேளாண் சட்டங்களை எதிர்த்து நேற்று தஞ்சையில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக அம்மாபேட்டையில் இருந்து டிராக்டரில் விவசாயிகள் சென்று கொண்டிருந்தனர். அம்மாப்பேட்டை அருகே கோவிலூர் பகுதியில் சென்ற போது அம்மாப்பேட்டை போலீஸார் டிராக்டரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 பேர் கைது
போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் பங்கேற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story