கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மத்தியஅரசை கண்டித்து கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மத்தியஅரசை கண்டித்து கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 9:51 AM IST (Updated: 15 Dec 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மத்தியஅரசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திட்டங்களை திரும்ப பெற கோரியும், இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்தியஅரசை கண்டித்தும் தஞ்சை-புதுக்கோட்டை சாலை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் நீலமேகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

30 பேர் கைது

மாவட்டக்குழு உறுப்பினர் சிவகுரு, சரவணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அன்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மத்தியஅரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

மேலும் ஆர்ப்பாட்டம் காரணமாக ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனம் நேற்று திறக்கப்படவில்லை. மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story