கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் திண்டுக்கல்லில் ரெயிலை மறிக்க முயற்சி
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் முயற்சியும் நடந்தது.
திண்டுக்கல்,
மத்திய அரசு 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், கலெக்டர் அலுவலகம் அருகே ஏராளமான விவசாயிகள் நேற்று திரண்டனர்.
சாலையில் அமர்ந்தனர்
இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை போலீசார் மூடினர். மனு கொடுக்க வருபவர்களை மட்டும் சிறிய கேட் வழியாக அனுமதித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தடுப்புகள் அமைத்தனர். இதற்கிடையே விவசாயிகள் கோஷமிட்டப்படி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அவ்வாறு வந்தவர்களை மேம்பாலத்தின் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாண்டி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், விவசாய சங்க நிர்வாகிகள் லட்சுமணபெருமாள், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குண்டுகட்டாக கைது
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் போலீசாரை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். அதை பொருட்படுத்தாமல் போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்கள் மற்றும் போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது பஸ்களுக்கு முன்பும், பஸ்சுக்கு அடியிலும் படுத்து சிலர் போராடினர். அவர்களையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றி சென்றனர். இறுதியில் பெண்கள் உள்பட மொத்தம் 230 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்
மேலும் கைது செய்த அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆனால், போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து அவர்கள் வாங்கி கொடுத்த மதிய உணவை சாப்பிட மறுத்தனர். பின்னர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்த உணவை சாப்பிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் மறியல் முயற்சி
அதேபோல் தமிழ் புலிகள் கட்சியினரும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதற்காக மாவட்ட செயலாளர் சின்னகருப்பன் தலைமையில், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் பெரியார்மணி, மத்திய மண்டல செயலாளர் மருதை சிறுவாணன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சங்கத்தமிழன் உள்ளிட்டோர் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் மறியலுக்கு முயன்றதாக 26 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story