செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்; சத்தியமங்கலத்தில் பரபரப்பு


சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
x
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
தினத்தந்தி 15 Dec 2020 7:45 PM GMT (Updated: 15 Dec 2020 5:50 PM GMT)

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்ப்பு
சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சத்தியமங்கலம் நகர பகுதியில், அதுவும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படுவார்கள். எனவே கோட்டுவீராம்பாளையத்தில் செல்போன் கோபுரம் அமைக் கக்கூடாது என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் என 7 முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர் அதிகாரிகளுக்கும் இதுபற்றி மனு அளித்தனர்.

பொதுமக்களின் இந்த எதிர்ப்பு காரணமாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

முற்றுகை
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் அமுதாவிடமும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story
  • chat