தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவி பலி; டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை
தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி லாரி மோதி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி
தக்கலை அருகே மேக்காமண்டபம் பரவகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவருடைய மகள் ரூபிஷா (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று மதியம் ரூபிஷா, மேக்காமண்டபம் கைசாலவிளை பகுதியை சேர்ந்த தனது உறவினரான சுபலா (23) என்பவருடன் ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார். அவர்கள், அழகியமண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சுபலா ஓட்டினார், ரூபிஷா பின்னால் அமர்ந்திருந்தார்.
லாரி மோதியது
தக்கலை போலீஸ்நிலையம் அருகே உள்ள நடுநிலைப்பள்ளி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், அவர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ரூபிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுபலா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ரூபிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக லாரியை பறிமுதல் செய்து, டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே அழகுமலையை சேர்ந்த முருகானந்தம் (37) எனபவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story