திருவண்ணாமலை கிரிவலப்பாதை வரைபடத்தில், ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடாததால் பக்தர்கள் வேதனை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அஷ்டலிங்க கோவில்கள்
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த மலை அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வரைபடத்தில் இல்லை
கிரிவலம் வரும் பக்தர்கள் அடிஅண்ணாமலையில் உள்ள ஆதிஅண்ணாமலையார் கோவிலுக்கு செல்லாமல் போகமாட்டார்கள். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அஷ்ட லிங்க கோவில்களுக்கான வழியை தெளிவுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் வரைபடங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் கிரிவலப்பாதையில் உள்ள பழமையான கோவிலான அடிஅண்ணாமலை ஆதி அண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல புதிது, புதிதாக பலர் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்பு வாய்ந்த ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ள இடம் அவர்கள் அறியும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் கிரிவலப்பாதையில் வைத்து உள்ள வரைப்படங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story