அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள நாளை (வியாழக்கிழமை) காலை அரியலூர் மாவட்டத்திற்கும், மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார்.
இதற்காக அவர் நாளை காலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஆத்தூர், பெரம்பலூர் வழியாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்தடைகிறார்.
நலத்திட்ட உதவிகள்
அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பாக ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் பல்வேறு துறைகளின் மூலமாக மொத்தம் 21,504 பயனாளிகளுக்கு ரூ.129.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் கொரோனா தடுப்பு பணிகளையும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சர் நடத்துகிறார். இதையடுத்து குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து அவர் அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்துக்கொண்டு, பெரம்பலூருக்கு கார் மூலம் வந்தடைகிறார்.
முடிவுற்ற திட்டப்பணிகள்
அங்கு மதியம் 3 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.19.25 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,614 பயனாளிகளுக்கு ரூ.23.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
கலந்தாய்வு
இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பின்னர், குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்கிறார். மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாலை 6 மணியளவில் முதல்-அமைச்சர் பெரம்பலூரில் இருந்து கார் மூலமாக சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
உற்சாக வரவேற்பு
முன்னதாக அரியலூர் மாவட்டத்திற்கு வரும் முதல்-அமைச்சருக்கு, அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்திலும், ஆலத்தூர் தாலுகா அல்லிநகரத்திலும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பந்தல் அமைப்பது மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2 மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் அ.தி.மு.க.வினர் சார்பில் முதல்-அமைச்சரை வரவேற்று அலங்கார வளைவுகளும், கட்சி கொடிகளும், விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அரசு கொறடா வேண்டுகோள்
அரியலூர் நகருக்கு நாளை கார் மூலம் வரும் முதல்-அமைச்சருக்கு அரியலூர் மாவட்ட எல்லையான ெரயில்வே மேம்பாலத்தில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து ஊர்வலமாக காரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முருகன் கோவில், சத்திரம், எம்.பி.கோவில் தெரு, தேரடி, மார்க்கெட் தெரு, பஸ் நிலையம், அண்ணா சிலை வழியாக ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்படுகிறார். பின்னர் அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அரியலூர் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரியும், ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக கல்லூரியும், வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணி பொறுப்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அரியலூர் நகருக்கு வந்து, முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ெவளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story