லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் உள்பட 6 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை அடுத்த தமிழக எல்லைப்பகுதியான ஒழிந்தியாம்பட்டில் உள்ள வட்டார போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியில் கடந்த 12-ந் தேதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வெளிமாநில வாகனங்களுக்கு தமிழகத்தில் பயணிக்க அனுமதி கட்டணத்திற்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக சோதனைச்சாவடியில் இருந்து கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று முன்தினம் செஞ்சி அருகே வல்லத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் ஆவண பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக கணக்கில் வராத ரூ.73,200-ஐ போலீசார் கைப்பற்றினர்.
6 பேர் மீது வழக்கு
இந்நிலையில் வெளிமாநில வாகன ஓட்டிகளிடம் அனுமதி கட்டணத்திற்காக லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய தீபா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுபோல் ஆவண பதிவு செய்ய வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக வல்லம் சார்பதிவாளரான திருவண்ணாமலையை சேர்ந்த கேத்தரின்சுமதி, ஆவண எழுத்தர்களான வல்லம் பகுதியை சேர்ந்த சண்முகம், வீரமணி, சரவணன், லட்சுமணன் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story